கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின் தலைவராக இருந்தவர்.
தில்லையம்பலம் சிவநேசன்; 1963-10-16 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவர் லெப்டினன்ட் சங்கரின் தங்கையான சத்தியாதேவியை திருமணம் செய்தவர்;. இவர்களுக்கு சிந்து, மதி, சங்கர் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். இவர்களது இளைய பிள்ளையான சங்கர் அதிவேகப் படகு ஒன்றை வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடுதலைப் புலி உறுப்பினருடன் 18, சூலை, 2007 அன்று மரணமடைந்தார். கடற்புலிகளின் தலைவராக கடமையாற்றியதன் காரணமாக சூசை தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவில்லை ஆனால் தனது பிள்ளைகளை மிகவும் நேசித்தார். 14, மே, 2009 அன்று, சத்யாதேவியும் அவரது இரண்டு குழந்தைகளும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் படகில் ஏறி போர் மண்டலத்தை விட்டு வெளியேறினர். சூசை தனது குடும்பத்துடன் தப்பிச் செல்ல மறுத்து, போராடி இறக்க விரும்பினார். குடும்பத்தினர் தப்பிச் செல்ல முயன்ற படகு இலங்கைக் கடற்படையினரால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்டது. கடற்படையிடம் சரணடைந்திருந்த கடற்புலியால் சத்யாதேவி சூசையின் மனைவி என அடையாளம் காணப்பட்டார். அவர் தன் குழந்தைகளுடன் தனித்தனியாக காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தில் குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சில அரசாங்க கட்டுப்பாடுகளின் கீழ் திருகோணமலையில் வாழ்கின்றனர். சத்யாதேவி பின்னர் கொழும்பில் வெளியிடப்பட்ட “தி நேஷன்” ஆங்கில வார இதழில் ஒரு நேர்காணலை வழங்கினார், அங்கு அவர் போரின் போது தனது சில அனுபவங்களை விவரித்தார்.
போராளி வாழ்க்கை
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலக எரிக்கப்பட்டதன் பின்னர் சூசை புலிகள் அமைப்பில் இணைந்தார். விடுதலைப் புலிகளின்; 30 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். கறுப்பு யூலை படுகொலையைத் தொடர்ந்து போர் வெடித்தபோது, வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் குழுவில் சூசையும் இடம்பெற்றிருந்தார். பின்னர் இவர் யாழ்ப்பாண மாவட்ட தளபதி கேணல் கிட்டுவின் கீழ் வடமராட்சி பகுதி தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இராணுவத்தின் வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் என்ற நடவடிக்கையின் போது இந்த பதவியில் பணியாற்றினார் மற்றும் அதை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகித்தார்.
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய “கங்கை அமரன்” இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொட்டு அம்மானுடன் சூசையும் இன்று புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவராக விளங்குகின்றார். இவரை சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) “பயங்கரவாதி”யாக அறிவித்து பிடியாணையொன்றை விடுத்துள்ளது.






















