கேணல் சங்கர் என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் செப்டம்பர் 1949-26ஆம் நாள் பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் கடற்படைப் பிரிவை நிறுவியவரும், மேதகு தேசியத்தலைவரின்; உறவினரும் ஆவார். இலங்கையில் கல்வி பயின்ற இவர், கனடாவில் சில காலம் பணியாற்றி இலங்கைக்குத் திரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.
வாழ்க்கை
சொர்ணலிங்கம் தன் பெற்றோரின் ஆறு மகன்களில் இரண்டாவதாக 1949 செப்டம்பரில் பிறந்தார். இவர் வன்னியில் உள்ள மகா வித்தியாலயத்தில் படித்தார். பின்னர் 1959 மற்றும் 1969 இக்கு இடையில் இலங்கையின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உறைவிட மாணவராகப் பயின்றார். அங்கு இருந்தபோது, இவர் தாமோதரம் வீட்டில் வசித்து வந்தார். மேலும் தன் கல்லூரியின் சார்பில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி விளையாட்டு வீரராகத் தன்னை நிரூபித்தார்.
பின்னர் இவர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வானூர்திப் பொறியியல் படித்தார். தனது படிப்பை முடித்த சிறிது காலம் கழித்து, இவர் கனடாவின் கியூபெக், மொண்ட்ரியால் நகருக்குச் சென்றார், அங்கு இவர் ஏர் கனடாவில் பணிபுரிந்தார்;. அங்கு இருந்தபோது, இவர் 1973 ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராகவில்லை என்றாலும், தகவல் தொடர்பு சாதனங்கள், கப்பல்கள், வானலையுணரி (ரேடார்), ஆயுதங்கள் போன்றவற்றைப் பெறுவதற்குப் பொறுப்பான வெளிநாட்டுக் கொள்முதல் அலுவலகத்தை அமைப்பதில் இவர் உதவினார்.
புலிகள் இயக்க உறுப்பினராக
கனடாவின் மொண்ட்ரியாவில், இருந்து சொர்ணலிங்கம் 1983 யூலையில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கிருந்து மீண்டும் இலங்கைக்குத்திரும்பினார். இவர் நாடு திரும்பியதும், விடுதலைப் புலிகளின் முழுநேர உறுப்பினராக இணைந்து, இயக்கத்தை பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இவரது மூன்று சகோதரர்கள் இறந்தனர்: ஒரு சகோதரரான மனோகரன் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட பின்னர் சயனைட் உண்டு தற்கொலை செய்து கொண்டார்; “லெப்டினன்ட் சித்தார்த்” என்ற வசீகரன், மன்னாரில் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பில் இறந்தார், மேலும் மூன்றாவது சகோதரர் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரைப் பற்றி மேலதிக செய்திகள் எதுவும் தெரியாத நிலையில் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. 2000ஆம் ஆண்டில், சொர்ணலிங்கம் தலைவருடன்; நோர்வே தூதுவர் எரிக் சோல்ஹெய்முடனான அவரது சந்திப்பில், மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டார்;. இவரும் அரசியல் பிரிவு தலைவரும் சு. ப. தமிழ்ச்செல்வன் மட்டுமே அந்தச் சந்திப்பில் பிரபாகரனுடன் நெருக்கமாக இருக்குமளவுக்கு நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.
விரமரணம்
சொர்ணலிங்கம் 26 செப்டம்பர் 2001 அன்று காலை 10:45 மணியளவில் ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்புக்கு தனியே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வன்னிக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் கிளைமோர் கண்ணிவெடியில் கொல்லப்பட்டார்.










