


உலகெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
தமிழீழ மாவீரர்களுக்கான ஆவணப்பேழையூடாக உங்களுடன் ஒரு வார்த்தை
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே”
என்று பாடினான் புரட்சிக்கவிஞன் பாரதி. அந்தக் கூற்றுக்கு நிகரானவர்களாக எம் மூதாதையர் வாழ்ந்த சொர்க்க பூமி. இச்சொர்க்க பூமியிலிருந்து பாசிச வெறி பிடித்த மிலேச்சவாதிகளால் சின்னாபின்னமாக்கப்பட்டோம். எந்தவொரு மனித இனத்திற்கும் வரலாறு என்பது அவசியமாகும். வரலாறு கண்ட ஈழத்தமிழர்கள் தமக்கென்றொரு பூர்வீகத்தினையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் கொண்டவர்கள். நாட்டில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் விளைவாக மாபெரும் போராட்டம் எம் மண்ணில் வெடித்தது. இப்போராட்டத்தில் தம்மை பலர் இணைத்தனர். தமிழர்களின் வாழ்வே போராட்ட களமாகியது. போராட்டம் உக்கிரமடைந்தது. பலர் சமர்க்களத்தில் வீரமரணமடைந்தார்கள். மாவீரர்களானார்கள். மாவீரர்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள். எம்மினத்தின் விடுதலைக்காக தேசியத்தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிபடுத்தலில் களமாடி ஆகுதியானவர்கள். அவர்கள் உடல், உயிர், ஆவி. அனைத்தையும் விடியலுக்காக தியாகம் செய்த மா மனிதர்கள். அவர்கள் தம் இளமைக் காலத்தைத் துறந்து தமதுயிரை துச்சமென நினைத்து தம் இனத்தின் விடுதலை வேள்விக்காய் அர்ப்பணித் தார்கள். இலட்சிய வழியில் கொள்கைக்காக இம்மியும் பிசகில்லாது பூண்ட கொள்கையின் வெற்றிக்காய் ஆகுதியானார்கள். இவர்களது அளப்பரிய தியாகம் வீண்போகக்கூடாது என்னும் ஆதங்கத்தோடு தாயகம் மட்டுமல்லாது புலம்பெயர்தேசங்களில் எங்கெல்லாம் ஈழத்தமிழர் கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் மாவீரர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும். உலகம் போற்றுகின்ற மாவீர்கள் பலர் இருக்கலாம். குறிப்பாக மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் ஜூலியஸ்சீசர், மாவீரன் நெப்போலியன் எனப் பட்டியல்கள் நீண்டு செல்லும். இத்தகையோர் தம் இனத்தின் எழுச்சிக்காகவும் மக்கள் வாழ்விற்காகவும் தலைமை தாங்கினர். வழிப்படுத்தினர். தம் விவேகம் நிறைந்த செயல்கள், புத்திசாதுரியமான வழிமுறைகளால் போரில் வென்றனர். மக்கள் நலன்சார்ந்த பணிகளில் உயர்ந்தனர். மாவீரர்களாகப் போற்றப்பட்டனர். ஆனால் எமது உறவுகள் அடக்கி ஒடுக்கி வாழ்வுரிமை மறுக்கப்பட்ட இனத்தின் விடுதலை வேண்டிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தில் நீதியும் நியாயமும் இருந்தது. உலக சாம்ராட்சியங்களைக் கட்டி எழுப்பும் தலைமுறை கடந்த போராட்டமாக இருக்கவில்லை. உரிமை மறுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காய் எதிரியோடு சமராடி தம்உயிரை மாய்த்தார்கள்.
போராட்ட நுணுக்கங்களாலும் அதீத துணிச்சலினாலும் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய எம்மறவர்களின் தியாகயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. இவர்கள் ஒன்றும் தேவர்களாகவோ, அனுமானுசிய சக்திகளால் ஆட்பட்டவர்களாகவோ இல்லை. எம்மைப்போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். பொருளாதாரத்திலும் வாழ்வின் வசந்தத்திலும் திழைத்தவர்கள் அல்ல. இனத்தின் விடிவிற்காய் எம்முள் இருந்து முகிழ்த்தெழுந்தவர்கள். இவர்களின் அர்பணிப்பனால் வீறுகொண்ட விடுதலைப்போராட்டத்தைபார்த்து பொறுக்க முடியாத பல நாடுகளும் அரசுகளும் திட்டமிட்டு தடை செய்தனர். இத்தடை களையும் தாண்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியானார்கள். இத்தகைய தியாகத்தின் உணர்வெழுச்சியை சந்ததி சந்ததியாக போற்றுவதற்குரிய ஏற்பாட்டினை தாயத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் உணர்வெழுச்சியோடு போற்றி வருகின்றனர்.
தாயகத்தில் நான் படித்த காலங்களில் மாவீரர்கள் தொடர்பான ஆவணப்பேழை ஒன்றினை தொகுக்க வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் குடிகொண்டிருந்தது. ஆனால் தாயகத்தில் நிலவும் சட்ட மட்டுப்பாடுகள் என்னை இத்தகையதொரு இணையத்தளத்தினை உருவாக்குவதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் நான் பிரித்தானியாவில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றமையால் அதன் வழியான பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதனால் எம்மையும் எமதுறவுகளின் வலிகளையும் நன்குணர்ந்து கொண்ட பிரித்தானிய அரசு இத்தகைய ஆவணப்படுத்தல்களை ஒருபோதும் தடுக்கமாட்டாது என்னும் நீண்ட நம்பிக்கையில் என்னால் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் மாவீரர்களின் பதிவுகளை மிக விரைவில் தொகுத்து முடிப்பதற்கு உலகம் பூராவும் வாழ்கின்ற தமிழ் உறவுகளின் ஒத்துழைப்பினை வேண்டி நிங்கின்றேன். 2009ஆம் ஆண்டு எமது இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தாயகத்தில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தோம். இத்துன்பங்கள் இன்று வரை முற்றுப் புள்ளியின்றி நேரடியாகவும், மறைமுகமாவும், ஆன்மிக வழியிலும், போதைவஸ்து என்னும் வழியாலும் வாழ வேண்டிய எம் இளம் தலைமுறையை தீய வழிகளிலும் வழிகாட்டி இன்று மிலேச்ச சமூகம் ஒன்றை நோக்கிச் செல்லும் இனமாக மாற்றப்பட்டு விட்டோம். இந்த மாற்றம் எதிர்காலத்தில் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற உறவுகளிடையே நீண்ட தொடர்பற்ற நிலைமையனை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற எமதுறவுகளின் பிள்ளைகள் தமது வேர்களைத்தேடுகின்ற பொழுது இத்தளம் துணைநிற்கும் என்பதுடன் என்றும் எம் இனத்திற்காக தமதுயிரை தியாகம் செய்த மாபெரும் தியாகிகளை எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது என்ற நோக்கிலும் தமிழ் தகவல் மையத்தினரின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் என்னால் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி,
அ.கோநிலவன்,
வேல்ஸ். தொடர்புகளுக்கு :
நோக்கு
மாவீரர்களின் தியாகமும் வீரத்தையும் மரியாதையுடன் நினைவு கூர்ந்து, அவர்கள் பாதுகாத்த மதிப்புகள் மற்றும் கனவுகள் தலைமுறைகள் வரை வாழ்ந்து கொண்டிருக்க உதவுவதே எங்கள் பணி. அவர்களது வரலாறையும் சுதந்திர போராட்டத்தின் உணர்வையும் உண்மையாகப் பாதுகாக்கும் கல்வி மற்றும் நினைவு மேடை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.
தூர நோக்கு
மாவீரர்களின் நினைவு சமூகத்தின் மனங்களில் என்றும் ஒளியாக இருக்கச் செய்யும், அமைதி, மரியாதை மற்றும் உண்மை என்பவற்றை முன்னிறுத்தும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை. அவர்கள் விட்டுச் சென்ற வீரப்பெருமை மற்றும் நீதியின் பாதை எப்போதும் எங்களை வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.