விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாகரனுடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது.
போர்ப் பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர்.
பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.
வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார்.
பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.
இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி படையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி புலிகளின் இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி.
சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி.டுவ-ஊழட-pழnயெஅயயn
எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.
நாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி (பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது.
எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.
பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது.
இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.
எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் வீரமரணமடைந்தார்கள்.









