தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.
அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.
ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார்.
பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி “இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.
விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட “பவள்” கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.
கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்….. இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. “சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும்.

