விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது.
குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ஆம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார். இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அப்போது அவருக்கு வயது 17. அவர் வாழ்ந்த காலம் 40 வருடம்.
இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர்.
விடுதலைப்புலிகள் மகளிர் 2ஆம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார். இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார்.
எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார்.
1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளிர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
2ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார்.
1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது. வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ஆம் நாள்.

